click here

Friday, 20 January 2017

நான் இதையெல்லாம் கொடுக்கவேண்டும்- மருத்துவர்கள் பேச்சை கேட்காத லாரன்ஸ்

லாரன்ஸ் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கலந்துக்கொண்டார்.
நேற்று உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்கள் கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு லாரன்ஸ் ‘போராட்ட களத்தில் நானும் இருக்க வேண்டும். அந்த மக்கள் முகங்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
உணவு மற்றும் குடிநீர், கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போராட்டம் வெற்றிபெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன்’ என கூறி மீண்டும் மெரினா நோக்கி கிளம்பிவிட்டாராம்.

விஜய்யை தொடர்ந்து முகத்தை மூடி போராட்டத்தில் கலந்துக்கொண்ட மற்றொரு முன்னணி நடிகர்

இளைய தளபதி விஜய் இன்று அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டார். பலரும் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
அவரை தொடர்ந்து பல நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து வருகின்றனர், தற்போது நடிகர் கார்த்தி முகத்தை மறைத்துக்கொண்டு இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
கார்த்தி நேற்று நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் கூட தொடர்ந்து மணி நேரம் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் நடிக்கவில்லை விஷால் மறுப்பு


கடந்த சில வருடங்களாகவே ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி போடுவதை தவிர்த்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா. ஆனால் நடிகர் விஷாலுடன் மீண்டும் நயன்தாரா நடிக்க உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த ஜோடி சத்யம் படத்தில் கடந்த 2008ம் ஆண்டு இணைந்து நடித்திருந்தது. 

புதிய படத்தை பிரம்மம் பட இயக்குனரும், கமல்ஹாசனின் உதவியாளருமான சோகிரேட்ஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி விஷாலிடம் கேட்டபோது,’இதுபோன்ற செய்திகள் எங்கிருந்து வெளிவருகிறது என்று தெரியவில்லை. தற்போது துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2ம் பாகம் என 3 படங்கள் நடிக்க உள்ளேன். 

இதை தவிர்த்து வேறு புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை’ என்றார். இதற்கிடையில் விஷால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு தொலைபேசியில் அறிமுகம் இல்லாத சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறார்.

வயது அதிகமானால் கவலை இல்லை : ஸ்ரேயா ஹேப்பி

ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. பிறந்த தேதி, பிறந்த மாதத்தை சொன்னாலும் பிறந்த வருடத்தை சொல்வதில்லை. உண்மையான வயது தெரிந்தால் ரசிகர்களிடம் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். படங்களில்கூட மனைவி வேடங்களை தவிர்த்து காதலியாக மட்டுமே நடிக்க முயல்கின்றனர். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க கேட்டால் சில சமயம் வாய்ப்பையே உதறிவிட்டு நடிக்க மறுத்துவிடுகின்றனர். 

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஓய்ந்தபிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர். வயதான வேடங்களில் நடிப்பது பற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியது: சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது. 

எந்தவயதாக இருந்தாலும் ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும்தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதே வேறு தொழிலாக இருந்தால் ஏதாவது செய்ய அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

வறட்சியை பார்வையிட மத்திய குழு நாளை தமிழ்நாடு வருகை

வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டில் வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு மனு கொடுத்துள்ளது.

எனவே வறட்சியை பார்வையிட மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் 9 பேர் இடம் பெற்றுள்ளனர். மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் வசுதா மிஸ்ரா இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழு நாளை (21-ந்தேதி) தமிழ்நாடு வருகிறது. அவர்கள் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்கின்றனர்.

அவர்களிடம் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் வறட்சி நிலவரம் குறித்து விரிவாக விளக்குகின்றனர். பின்னர் வேளாண்மை, நீர் ஆதாரங்கள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 மாவட்டங்களை பார்வையிடுகின்றனர். இவர்கள் 24-ந்தேதிவரை ஆய்வு நடத்துகின்றனர்.

வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் தண்ணீர் பிரச்சனையை ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 16,682 கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 1564 கிராமங்கள் 87 சதவீதம் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் மேல், வறட்சி பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: தமிழக முதல்வர்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். 

பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அத்துடன், ஜல்லிக்கட்டு அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அவசர சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு இன்று மாலை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். 

வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்.ஜல்லிக்கட்டுக்கு தடை வர இனி வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தால் அதனை நீக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணும் தமிழகத்தில் இளைஞர்கள் ஏற்று நடத்தி வரும் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை ஆகியவற்றை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது, திராவிட கலாச்சாரம் மற்றும் அதன் ஒருமைப்பாடு மீது நடத்தும் தாக்குதல். தென்னிந்தியாவில் இப்படித்தான் இது பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சியில் நான் படப்பிடிப்பில் இருக்கும்போது மக்கள் இதனால் காயப்பட்டிருப்பதை நான் கவனித்தேன்.

ஆந்திராவிலும் அவர்களது கலாச்சார நிகழ்வு தடைசெய்யப்பட்டிருப்பதில் வருத்தமளிப்பதை நான் சில அரசியல் கூட்டங்களில் கேட்டறிந்துள்ளேன். மிருகங்கள் வதை செய்யப்படுவதாகவே ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டை ஆகியவற்றை தடை செய்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கண்டிப்பான போக்கை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி பற்றி கணக்கெடுக்க வேண்டும்.

உலகிலேயே அதிக அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வது இந்தியா தான். 2.4 மில்லியன் டன் மாட்டிறைச்சி மற்றும் கன்றுகள் இறைச்சியை 2015-ஆம் ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில் பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 2 மற்றும் 1.5 டன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலர் வர்த்தகம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் 14 சதவிதம் வளர்ச்சி இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அத்தகைய மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனத்தை வைத்திருப்பது இந்துக்கள், முஸ்லிம்கள் அல்ல.

2.4 மில்லியன் டன் இறைச்சிக்கு எத்தனை பசு, கன்று, எருமைகள் வெட்டப்பட்டிருக்கும் என நினைத்துப் பாருங்கள். நம் கண்ணில் படவில்லை என்பதால் மட்டும் இந்த மாதிரியான விஷயங்கள் மிருக வதை என்று எப்படி பேசப்படாமல் இருக்கிறது? இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்களை ஒப்பிடும்போது இதில் காயப்படும் மிருகங்களின் எண்ணிக்கை ஒன்றுமே இல்லை என்கிற போது, ஏன் மிருக வதை ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பொருந்த வேண்டும்?. 

இதே மிருக வதை சேவல் சண்டையை தடை செய்யவும் சொல்லப்பட்டது. இந்த விளையாட்டுக்கு மத ரீதியில் முக்கியத்துவம் இருக்கிறது. கயசூரா என்ற அரக்கனை கொலை செய்ய சேவல் வடிவில் வந்த சிவபெருமான் குக்குடேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். சேவல் சண்டை ஆந்திராவின் கலாச்சார அடையாளம். மிருக வதை சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு விரும்பினால், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளையும் தடை செய்ய வேண்டும். 

ஏதாவது ஒரு புள்ளியில் இந்த அறநெறி உணர்த்தும் மூடத்தனத்துக்கு நாம் எல்லை வகுக்க வேண்டும். இல்லையென்றால் நமது தேசத்தின் ஒருமைப்பாடை காப்பது மிகக் கடினம். ஜனசேனா கட்சி, ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டை மீதிருக்கும் தடையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.