click here

Friday, 20 January 2017

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: தமிழக முதல்வர்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். 

பின்னர் சட்ட நிபுணர்களுடன் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அத்துடன், ஜல்லிக்கட்டு அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அவசர சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு இன்று மாலை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். 

வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்.ஜல்லிக்கட்டுக்கு தடை வர இனி வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தால் அதனை நீக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

No comments:
Write comments