சென்னையில் திங்கள்கிழமை வீசிய வர்தா புயல் காரணமாக சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளத்துக்கும், மைதானத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதனால் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் அங்கு உறுதியாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடுகளத்தில் உள்ள ஈரத்தன்மையை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இரு அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின், 5-ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வர்தா புயல் காரணமாக, சேப்பாக்கம் மைதானத்துக்கோ, ஆடுகளத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
எனவே இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அங்கு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
புயலின் தாக்கத்தினால் மைதானத்தில் இருந்த காட்சித் திரைகள், ஏ.சி.க்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன் உயர் ஒளிவிளக்குகளில் இருந்து சில பல்புகள் வெடித்துச் சிதறியுள்ளன. இருப்பினும், அடுத்த இரண்டு நாள்களில் இவை அனைத்தும் உறுதியாக சீர்செய்யப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தார்கள். பயிற்சி ஆடுகளங்கள் சேதமடைந்துள்ளதால் இன்று எந்த அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபடவில்லை.
இந்நிலையில் மைதானத்தின் ஆடுகளத்தில் உள்ள ஈரத்தன்மையைக் குறைப்பதற்காக பல்வேறுமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக (அடுப்பு) கரியை எரியவிட்டு பிட்சின்மீது வெப்பம் செலுத்தப்படுகிறது. இதனால் பிட்சின் ஈரத்தன்மை குறைந்து இயல்பு நிலைக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Write comments